செய்திகள்

ஆரல்வாய்மொழியில் அய்யாக்கண்ணுவை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினர்

Published On 2018-03-03 13:50 GMT   |   Update On 2018-03-03 13:50 GMT
ஆரல்வாய்மொழியில் இன்று நடைபயணம் சென்ற அய்யாக்கண்ணுவை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 100 நாள் விழிப்புணர்வு நடை பயணம் தொடங்கி உள்ளனர்.

இவர்கள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனித எலும்புடன் சென்று மனு கொடுத்தனர். மேலும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது பிரதமரையும், மத்திய அரசையும் விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.

மேலும், தமிழக விவசாயிககள் பிரச்சினை பற்றி பிரதமர் பேசுவதில்லை என்றும், இதனை கண்டித்து டெல்லியில் பிரதமர் வீடு முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினார்.

இந்நிலையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர். அவர்கள் ஆரல்வாய்மொழி சந்திப்புக்கு வந்த போது அங்கு வேனில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

அப்போது அங்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அய்யாக்கண்ணு மற்றும் அவருடன் வந்த விவசாயிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அய்யாக்கண்ணு, தொடர்ந்து பிரதமரையும், மத்திய அரசையும் குறை கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Tags:    

Similar News