செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி- 3 பேர் கைது

Published On 2018-02-19 16:29 GMT   |   Update On 2018-02-19 16:29 GMT
ராஜாக்கமங்கலம் அருகே ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலத்தை அடுத்த அனந்தநாடார் குடியிருப்பில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த 6 லட்சத்து 50 ஆயிரம் பணம் தப்பியது.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறித்து வங்கி அதிகாரிகள் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2 பேர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தாங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில் அவர்கள் ஒடிசா மாநிலம் போத் மாவட்டத்தை சேர்ந்த பிபிஷானா ஜானி(வயது25) ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்று ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்ட அனில்கார்னாவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேரும் இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News