செய்திகள்

கொடைக்கானலில் வியாபாரிகளை மிரட்டிய காட்டெருமைகள்

Published On 2018-02-03 12:06 GMT   |   Update On 2018-02-03 12:06 GMT
கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டெருமைகள் புகுந்ததால் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் காட்டெருமைகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக டெப்போ பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகிறது. இவை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்குகின்றன.

தற்போது காட்டெருமைகள் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் அவைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலம் வனப்பகுதியில் இல்லாததால் குடியிருப்பு மற்றும் நகர் பகுதியில் புகுந்து விடுகின்றன. நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். அதனைத் தொடர்ந்து கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் கூலித் தொழிலாளி பாண்டி என்பவரை காட்டெருமை விரட்டியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

இரவு நேரத்தில் திடீரென நகர் பகுதியில் புகுந்த காட்டெருமைகள் அண்ணாசாலையில் கூட்டம் கூட்டமாக வலம் வந்தது இதனால் சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அச்சமடைந்தனர். திடீரென துரத்தியதால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

அதன் பின்பு வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் காட்டெருமைகளுக்கு தேவையான இரை மற்றும் தண்ணீர் வனப்பகுதியில் கிடைக்காததால் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மேய்ச்சல் நிலத்தை அதிகரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் காட்டெருமைகள் நகர் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை நிந்தரமாக தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News