செய்திகள்

பஸ் கட்டணம் உயர்வு: தஞ்சை- கும்பகோணத்தில் 5 ஆயிரம் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-22 12:10 GMT   |   Update On 2018-01-22 12:10 GMT
அரசு பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து தஞ்சை- கும்பகோணத்தில் 5 ஆயிரம் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் திருவையாறு அருகே மேலதிருப்பந்துருத்தியில் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இன்று குதித்தனர்.

இதேபோல் தஞ்சையில் கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் சிலர் கூறியதாவது:-

நாங்கள் தஞ்சை, திருவாரூர், அரியலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வருகிறோம். தற்போது அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டணத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

தினமும் பெற்றோர்களிடம் பஸ் கட்டணம் வாங்கி கொண்டு தான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருகிறோம். தற்போது பஸ் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. இது எங்களை போல ஏழை மாணவ- மாணவிகளுக்கு அதிக சிரமத்தை கொடுக்கும். மேலும் பஸ் பாஸ் கட்டணம் உயரும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் கிராமப்புற மாணவிகளுக்கு சுமையை ஏற்படுத்தும்.

மேலும் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் என அனைத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சி மக்களை பற்றி கவலைப்பட வில்லை.

இவ்வாறு அவர்கள் ஆவேசத்துடன் கூறினர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் மாணவிகள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் திரண்டு வந்து ‘வாபஸ் பெறு.. வாபஸ் பெறு.. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறு..’’ என்று கோ‌ஷமிட்டனர்.

மாணவிகளின் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நாகை புத்தூர் பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்து ரோட்டில் அமர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை போலீசார் விரைந்து வந்து போராட் டத்தில் ஈடுபட்ட மாண வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது மாணவ- மாணவிகளின் போராட்டமும் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News