செய்திகள்

பி.எச்.பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

Published On 2018-01-21 04:48 GMT   |   Update On 2018-01-21 06:26 GMT
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் (71). உடல்நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரது உயிர் பிரிந்தது.

சிந்தியா பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தராகவும், தமிழக அரசின் உயர்கல்வி குழு கவுன்சில் துணை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். அங்குள்ள வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

சிந்தியா பாண்டியன் உடலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிந்தியா பாண்டியன்

முக்கிய பிரமுகர்களின் இறுதி மரியாதைக்கு பின்னர் இன்று மாலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் சிந்தியா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த சிந்தியா பாண்டியனுக்கு அரவிந்த் பாண்டியன், மனோஜ்பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் ஆகிய 4 மகன்களும் தேவமணி என்ற மகளும் உள்ளனர்.

பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் செயல்பட்ட அவர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டார்.

இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மகன் அரவிந்த் பாண்டியன் அரசு வக்கீலாக உள்ளார். தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். #Tamilnews
Tags:    

Similar News