செய்திகள்

நத்தம் பகுதியில் நிலக்கடலை சீசன் பாதிப்பால் விவசாயிகள் கவலை

Published On 2018-01-19 12:33 GMT   |   Update On 2018-01-19 12:33 GMT
திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால் நிலக்கடலை சீசன் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நத்தம்:

திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் அரவங்குறிச்சி, செங்குறிச்சி, சிறுகுடி, மணக்காட்டூர், லிங்கவாடி, மலையூர், சாத்தாம்பாடி, கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் மானவாரி நிலங்களும்,இறவை சாகுபடி நிலங்களும், சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளன.

இந்த வருடம் விவசாயிகளுக்கு பருவமழை பெய்யாமல் பின்னடைவு ஏற்படுத்திவிட்டது. இதனால் பயறுவகைகள் மற்றும் தானியங்கள் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காமல் போய்விட்டது. மேலும் மானவாரியாகவும், இறவை சாகுபடி தோட்டங்களிலும் நிலக்கடலையை விவசாயிகள் பயிரிட்டு ஆங்காங்கே அறுவடை செய்து வருகின்றனர். இதில் ஒரு ஏக்கருக்கு சுமார் 10மூடையிலிருந்து 15 மூடை வரை மகசூல் கிடைக்கும்.

இது குறித்து புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னாக்கவுண்டர் கூறுகையில் இந்த வருடம் விவசாயிகள் எதிர்பார்த்த தென்மேற்கு,வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்து விட்டது. இதனால் விவசாய பணிகளில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நிலக்கடலை மூடை 1க்கு 60கிலோ எடை உள்ளது. ரூ.2400 வரை விலை போகிறது.

கிணறுகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இறவை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. மேலும் நிலக்கடலை சில்லரையாக ஒரு படி ரூ.40 வரை விலை போகிறது. நிலகடலை ரகத்தில் கம்பெனி, மேர்ஸ், மணிலா, நாடு போன்றவை உள்ளன. பொதுவாக நிலகடலைக்கு 90 நாட்கள் வயதாகும். இதற்கு தண்ணீர் வசதி மட்டும் இருந்தால் எந்த பட்டத்திலும் பயிரிடலாம்.

மேலும் இதில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் கடலையாக மக்கள் பயன்படுத்துகின்றனர். அவித்தும்,வறுத்தும் மற்றும் கடலை மிட்டாயாகவும் சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட நிலக்கடலை மழை குறைவாக உள்ளதால் சாகுபடி குறைந்து சீசன் பாதிப்பு அடைந்துவிட்டது என்றார். #tamilnews

Tags:    

Similar News