செய்திகள்

இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா?: வைரமுத்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம்

Published On 2018-01-19 10:33 GMT   |   Update On 2018-01-19 10:33 GMT
இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா? கவிஞர் வைரமுத்து எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #Vairamuthu #RajendraBalaji
மதுரை:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல்ஹாசன் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சியை நடத்துவது கஷ்டமான காரியமாகும்.

அ.தி.மு.க. கடந்த 45 ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக திகழ்ந்து வருகிறது. எங்கள் ஆளுமைகளாக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது மறைவுக்கு பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம ஆகியோரது தலைமையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வை இன்று மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கட்சி என்றால் கிளை அமைப்பு, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநகரம் வாயிலாக கிளைகள் வேண்டும். இதை ஒழுங்குப்படுத்த 10 ஆண்டுகளாவது வேண்டும். அதற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

ஆனால் இப்போது நடிகர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது கால தாமதமான அறிவிப்பாகும். அ.தி.மு.க. மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. இந்த அரசை முழுமையாக ஆதரிக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

புதிதாக கட்சி தொடங்குவது தீபாவளி ரிலீஸ்போல ஒரு மாதம் மட்டுமே ஓடக் கூடிய சினிமா போன்றது. ஆனால் அ.தி.மு.க. அடிமைப் பெண் போன்றது. எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும்.


ஆண்டாள் கடவுள். அவரை கோடிக்கணக்கானோர் வழிபட்டு வருகிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் கருத்து சொல்வது தவறு. மற்ற மதத்துக்கு எதிராக கருத்து எதுவும் சொல்லாமல் கவிஞர் வைரமுத்து இந்து மதத்துக்கு எதிராக பேசியது தவறாகும்.

இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா? கவிஞர் வைரமுத்து எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை. அவர் வருத்தம் தெரிவித்து விட்டதால் இந்த பிரச்சனையை விட்டு விடலாம்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #TamilNews
Tags:    

Similar News