செய்திகள்

திருவண்ணாமலையில் இருதரப்பினர் மோதல்: 12 பேர் கைது

Published On 2018-01-18 13:20 GMT   |   Update On 2018-01-18 13:20 GMT
திருவண்ணாமலையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை காணும் பொங்கல் பண்டிகை விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆலத்தூர் காலனி வழியாக சென்றனர். அப்போது காலனி பகுதியை சேர்ந்த சிலருக்கும், ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

பின்னர் அது இருதரப்பினருக்கு இடையே மோதலாக மாறியது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கம்பாலும், கல்லாலும் தாக்கி கொண்டனர். இதில் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் 2 தரப்பில் இருந்தும் தலா 18 பேர் என 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆலத்தூர் காலனியை சேர்ந்த ஆறுமுகம், முருகன், ஏழுமலை, சேகர், விஜயகுமார், பாஷா ஆகியோரையும், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், ஏழுமலை, பாலமுருகன், மருதுபாண்டியன், தமிழ்செல்வன், வரதன் ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News