செய்திகள்

கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு குமரி மீனவர் உடல் அடையாளம் தெரிந்தது

Published On 2018-01-13 10:28 GMT   |   Update On 2018-01-13 10:28 GMT
கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு குமரி மீனவர் உடல் டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிந்த டாக்டர்கள் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி ஒக்கி புயல் வீசியது.

இதில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற குமரி மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மாயமானார்கள். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கினர். அவர்களை மாநில அரசு சொந்த ஊருக்கு அழைத்து வந்தது.

இவர்களை தவிர இன்னும் பலர் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

புயலில் மாயமான மீனவர்களை உயிருடன் மீட்காவிட்டாலும் அவர்களின் உடல்களையாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கிடையே கடலில் மூழ்கிய குமரி மாவட்ட மீனவர்கள் பலரின் உடல்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

இவ்வாறு கரை ஒதுங்கிய உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளது. இதனால் உடல்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே இந்த உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டு வந்தது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடியப்பட்டினம் தோமையார் தெருவை சேர்ந்த டெல்பின் ராஜ் (வயது 49) என்பவரின்உடல் நேற்று அடையாளம் காணப்பட்டது.

டெல்பின் ராஜ் உடல் கேரள மாநிலம் திரூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. இதனை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிந்த டாக்டர்கள் டெல்பின் ராஜ் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இன்று அவரது உடல் சொந்த ஊரான கடியப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. அங்கு உடல் அடக்கம் நடந்தது. டெல்பின் ராஜீக்கு மேரி இந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 


Tags:    

Similar News