செய்திகள்

முத்தலாக், கள்ளத்தொடர்பு சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

Published On 2018-01-02 10:13 GMT   |   Update On 2018-01-02 10:13 GMT
ஆண்களை அடிமைப்படுத்தும் முத்தலாக் மற்றும் கள்ளத்தொடர்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன், பொது செயலாளர் மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி மனைவி தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்றால் இரவில் தூங்கும் போது கணவர் முத்தலாக் கூறிவிட்டார் என்று கூறி தனது கணவருக்கு உடனடியாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கொடுத்துவிட முடியும். இது ஆண்களை சட்டத்தின் துணை கொண்டு அடிமைபடுத்தும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையில் உரிய சட்டதிருத்தம் செய்ய வேண்டும் என்றே கடந்த ஆகஸ்ட் மாதம் ஆலோசனை வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆண்களுக்கு எதிராக சிறைதண்டனை பெற்றுத் தரும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று குடும்ப வன்முறை சட்டம் 2005 ஐ பெண்களின் நலன் காக்கிறோம் என்ற பெயரில் பெண்களின் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு நிறைவேற்றப்பட்டதில் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் உழைத்து சம்பாதித்து கட்டிய வீட்டை, கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி தனது வாழ்நாள் முழுவதும் வசிக்க சொந்தவீட்டில் இருந்து கணவனை வெளியேற்ற முடியும். இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை ஆண்கள் சந்தித்து வருகிறார்கள்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற சட்டப்பிரிவு 497-ல் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண்- பெண் இருபாலருக்கும் ஏன் தண்டனை வழங்க கூடாது என்ற கேள்வியை எழுப்பி மத்திய அரசு பதில் கூற வேண்டும் என்றும் கூறிஉள்ளது. ஆனால் இது போன்ற சமுதாய சீர்கேடுகளையும்,வஞ்சக கொலைகள் நடப்பதற்கும் காரணமான கள்ளத்தொடர்பு சட்டம் பிரிவு497ல் மத்தியஅரசு திருத்தம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுமிகவும் கண்டிக்கதக்க செயல். தவறுசெய்வதில் ஆண்- பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் இருபாலருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் உரிய சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.

மேலும் பெண்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட வரதட்சணை தடுப்பு சட்டம் பிரிவு 498ஐ தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் 90 சதவிகிதம் வழக்குகள் பொய்யாக கொடுக்கப்பட்டும் தவறாக பயன்படுத்தபட்டும் உள்ளது. இதனால் ஆண்கள் மட்டுமின்றி கணவனின் தாய், தந்தை, அக்காள், தங்கை, அண்ணன் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உரிய திருத்தங்களோடு இந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News