செய்திகள்

பிரதமர் மோடி 22-ந் தேதி ராமேசுவரம் வருகை என தகவல்

Published On 2017-12-29 05:05 GMT   |   Update On 2017-12-29 05:05 GMT
ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22-ந்தேதி ராமேசுவரம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமேசுவரம்:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் மொராரி பாபு. புகழ் பெற்ற ஆன்மீகவாதி. இவர் வருகிற 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ராமேசுவரத்தில் “ராம் கதா” (ராமாயண சொற்பொழிவு) நடத்துகிறார்.

இதில் குஜராத் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ராமாயண சொற்பொழிவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொராரி பாபு அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 22-ந் தேதி ராமேசுவரம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வருகிறார். தொடர்ந்து காரில் ராமேசுவரம் செல்கிறார்.

ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அன்று மாலையே மோடி டெல்லி திரும்புகிறார். மோடியின் வருகை குறித்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மொராரி பாபுவின் சொற்பொழிவில் மோடியின் உறவினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News