செய்திகள்

ஊட்டியில் கடும் உறை பனி - விடுதியில் முடங்கிய சுற்றுலா பயணிகள்

Published On 2017-12-28 10:43 GMT   |   Update On 2017-12-28 10:43 GMT
ஊட்டியில் இன்று காலை கடும் பனி உறை பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அறையில் முடங்கி விட்டனர்.
காந்தல்:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக கடும் பனி நிலவி வருகிறது. இன்று காலை மிக கடுமையான உறை பனி ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், ரெயில் நிலையம், தலைகுந்தா, வெண்லாக் டவுன் ஆகிய இடங்களில் கடுமையான உறை பனி நிலவியது.

எங்கு பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் இந்த நிலை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் வெளியே வர முடியாமல் அறையிலே முடங்கி கிடந்தனர்.

உள்ளூர் பொதுமக்கள் தலையில் தொப்பி, கையுறை, சொட்டர், கம்பளி அணிந்த படி சென்றனர். ஆட்டோ டிரைவர்கள் ரோடு ஓரம் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீசல் வாகனங்களில் டீசல் உறைந்ததால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஜீரோ டிகிரி செல்சியசும், சாந்தி நல்லா துணை மின் நிலையத்தில் மைனஸ் 3 டிகிரி செல்சியசும் உறை பனி பதிவாகி உள்ளது.

கடும் பனி காரணமாக ஊட்டி-கூடலூர் சாலையில் டி.ஆர். பஜார், லவ்டேல், சோலூர் டென்சான்டல், தலை குந்தா மற்றும் குன்னூர் சாலையில் கேத்தி, பாலாடா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.

இதனால் தேயிலை மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த உறை பனி தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News