செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

Published On 2017-12-17 04:12 GMT   |   Update On 2017-12-17 04:12 GMT
கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன.
ராமேசுவரம்:

ராமேசுவரம் மீனவர்கள், ஒக்கி புயல் தாக்குதலுக்கு பின்னர் கடந்த 11-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் நேற்று ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் படகுகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் விரட்டியடிக்கப்படுவதால் மீன்கள் இன்றி வெறும் கையுடன் கரை திரும்புகிறோம். இந்த தொழிலையே விட்டு விடவேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

தொடர் தாக்குதல் குறித்து மீனவர் சங்க தலைவர்கள் கூறும்போது, அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் எங்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அரசியல்வாதிகள் அவ்வப்போது குரல் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. எங்கள் நிலை குறித்து வருகிற 23-ந்தேதி ராமேசுவரம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

இதற்கிடையில் அனைந்திந்திய மீனவர் சங்க கூட்டமைப்பின் தலைவர் போஸ் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மீனவர்களுக்கு சேட்டிலைட் போன், வயர்லஸ் உள்ளிட்ட நவீன கருவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News