செய்திகள்

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர்

Published On 2017-12-12 12:14 GMT   |   Update On 2017-12-12 12:35 GMT
ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். தூத்தூரில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்கள் தரப்பில் சீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மீனவர்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமாக அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.  குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும். புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். படகுகள் சேதம் குறித்து கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கடைசி மீனவரை மீட்கும் வரை மீட்பு பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News