செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சையின்போது அரசு மருத்துவர்களை தடுத்தது யார்?: ஆணையம் விசாரிக்க முடிவு

Published On 2017-12-12 01:51 GMT   |   Update On 2017-12-12 01:51 GMT
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அரசு மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 9 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களான பாலாஜி, கலா, முத்துசெல்வன், தர்மராஜன், டிட்டோ ஆகியோரும் இதில் அடங்குவர்.

இதில், பாலாஜியை தவிர, நாங்கள் யாரும் ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் சந்திக்கவில்லை என்றும், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான பணிகள் எதையும் தாங்கள் செய்யவில்லை என்றும் ஆணையத்தில் மருத்துவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் அருகே தனி அறையில் அமர்ந்து இருந்ததாகவும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை மட்டும் பெற்று அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர். சிகிச்சையின் போது, ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பான எந்த பணியையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் அரசு மருத்துவர் பாலாஜி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.



அரசு சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டதும் அந்தக்குழு ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை தங்களது முழு பொறுப்பில் எடுத்திருக்க வேண்டும் என்றும், ஏன் அதுபோன்று செய்யவில்லை என்றும் அந்தக்குழுவிடம் ஏற்கனவே நடந்த விசாரணையின்போது நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, தங்களது உயர் அதிகாரிகளின் கட்டளையை ஏற்று தாங்கள் அமைதியாக இருந்ததாக அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அனுமதிக்காமல் தடுத்தது யார்? என்பது குறித்து ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மருத்துவர்கள் குழு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ராமசீதா என்பவர், தான் அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிவதாகவும் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவர் மயங்கிய நிலையிலேயே இருந்ததாகவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன்பின்பு போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டச்சத்து நிபுணர் என்று தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து ராமசீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்த மருத்துவர் சங்கர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆணையத்தில் ஆஜராகிறார்.
Tags:    

Similar News