செய்திகள்

மத்திய அரசை கவிழ்க்கும் வகையில் விவசாயிகள் போராட்டம் அமைய வேண்டும்: அன்னா ஹசாரே பேச்சு

Published On 2017-12-10 11:43 GMT   |   Update On 2017-12-10 11:43 GMT
மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கு மார்ச் 23-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டம் நடக்க வேண்டும் என்று அன்னாஹசாரே கூறினார்.
மதுரை:

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் நதிநீர் பிரச்சினைகளில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக தீர்வு காணும் வழி முறைகள் பற்றி ஆராய தேசிய கருத்தரங்கு மதுரையில் இன்று நடந்தது.

காந்திய தலைவர் அன்னாஹசாரே, இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங், முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர். இதில் அன்னாஹசாரே பேசியதாவது:-

என்னை வாழும் மகாத்மா என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு நான் பாத்திரமானவன் அல்ல. காந்திஜியின் வார்த்தைகளால் உந்தப் பட்டு தேசியத்தை சீர்திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன். அவ்வளவு தான்.

நதி என்பது மலையில் தோன்றி அணையில் சேகரமாகி கிராமங்களை வந்தடைய வேண்டும். இதுதான் உண்மையான நதிநீர் மேலாண்மை.

இன்று வேலைவாய்ப்பின்மையை பூர்த்தி செய்ய மத்திய-மாநில அரசுகள் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என கூறுகின்றன. ஆனால் நம் கிராம விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு போன்ற வேலைகளை செய்தாலே போதும். வேலையின்மை தீர்ந்துவிடும்.

மோடி ஆகட்டும், ராகுல் ஆகட்டும் அவர்கள் மனதில் பெரிய தொழிற்சாலைகள் பற்றிய சிந்தனை தான் உள்ளது. எந்த தலைவனின் மனதில் விவசாயம் பற்றிய சிந்தனை வருகிறதோ அவரைத்தான் நான் ஆதரிப்பேன்.

கடந்த 22 வருடமாக 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த அளவிற்கு தொழில் அதிபர்கள் இறந்து இருக்கிறார்களா? இது விவசாயிகள் நாடு. விவசாயம் செழிக்க வேண்டும்.

எந்தவொரு மனிதனின் மனதை மாற்றுவதுதான் முக்கியமானது. அதற்கான வேலையைதான நான் செய்கிறேன். குரங்கை வைத்துதான் கூத்தாடியின் குடும்பம் வாழ்கிறது. அதே மாதிரி நிலையில்தான் மத்திய-மாநில அரசுகள் உளளன.

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தும் போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும்.

விவசாய கடன் மீதான வட்டி அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த வி‌ஷயம் அரசுக்கு தெரியாதது போல ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விவசாய பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்வது பற்றி பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளேன். இந்த பிரச்சனையை முன்னிலைபடுத்தி தான் மார்ச் 23 போராட்டம் நடக்கிறது.

மத்திய அரசை கவிழ்க்கும் அளவிற்கு இந்த போராட்டம் இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளை பார்த்து அரசு பயப்படும். அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் பேசுகையில், தண்ணீருக்காகவும், விவசாய முன்னேற்றத்திற்காகவும், லோக்பால் சட்டத்தை அமுல் படுத்தக்கோரியும் போராட வேண்டிய காலகட்டத்தில் இந்திய மக்களாகிய நாம் இருக்கிறோம் அதற்காக தான் மதுரையில் கூடி உள்ளோம் என்றார்.
Tags:    

Similar News