செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

Published On 2017-12-07 07:35 GMT   |   Update On 2017-12-07 07:36 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியை சந்தித்து வெற்றிவேல் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதில் தொப்பி சின்னத்துக்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார். ஆனால் அந்த சின்னத்தை 29 பேர் கேட்டுள்ளனர். இதனால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய தினகரன் திட்டமிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். இதற்காக தினகரன் ஆதரவாளர் அனுமதி கேட்டும் போலீசார் உரிய அனுமதியை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் இதுபற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ்லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் ஆன்லைன் மூலமாக தினகரன் பிரசாரத்துக்கு கடந்த 4 நாட்களாக அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன் பின்னால் ஒரு அரசாங்கமே அணிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News