செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2017-12-06 06:18 GMT   |   Update On 2017-12-06 06:18 GMT
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை:

ஒக்கி புயல் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. பிசான சாகுபடி பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. ஆய்க்குடி, தென்காசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகள் நிரம்பின.

பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய 4 அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அடவிநயினார் அணையும் நிரம்பி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 138.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,583.95 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த அணையில் இன்னும் 2 அடி தண்ணீர் நிரம்பினாலே உபரிநீர் வெளியேற்றப்படும். 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.05 அடியாக உள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 111 அடியாக உள்ளது. 49.20 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணை நீர்மட்டம் 46 அடியாகவும், 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 113 அடியாக உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆய்க்குடி-66

தென்காசி- 12.6

சிவகிரி-10

பாளை-6

நெல்லை- 3.3

சங்கரன்கோவில்- 3.

Tags:    

Similar News