செய்திகள்

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உத்தரவு: 3 மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல்

Published On 2017-12-05 03:44 GMT   |   Update On 2017-12-05 03:44 GMT
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 3 மாவட்ட கலெக்டர்கள் அப்பீல் செய்துள்ளனர்.
மதுரை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர். எம். ராமையா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். பின்னர் அவர் தீர்ப்பு கூறுகையில், இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும், வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக தமிழக அரசு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

அப்பீல் மனுவில் கலெக்டர்கள் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் மத்திய அரசின் இறக்குமதி கொள்கை அடிப்படையில் மணல் இறக்குமதி செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தமிழக அரசின் கனிம வள சட்டப்படி, மனுதாரர் இறக்குமதி செய்துள்ள மணல் தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாதுமணல்) என்ற வரையறைக்குள் வருகிறது.

அத்தகைய தாதுமணல் இறக்குமதி செய்வதற்கான உரிமம், விற்பனைக்கு கொண்டு செல்வற்கான போக்குவரத்து அனுமதி சீட்டு ஆகியவற்றை அதிகாரிகளிடம் மனுதாரர் பெறவில்லை.

ஆகவேதான் மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இவற்றை கருத்தில் கொள்ளாத தனி நீதிபதி, பொதுநல வழக்குகளை போல இந்த வழக்கையும் கையாண்டுள்ளார்.

வழக்கு தொடர்பான எதிர்மனுதாரர்கள் முறையான வாதங்கள் வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News