செய்திகள்

ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: தமிமூன் அன்சாரி

Published On 2017-12-04 05:54 GMT   |   Update On 2017-12-04 09:59 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமூன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள் சாய்ந்து டிரான்ஸ் பார்மர்கள் சேதம் அடைந்துள்ளன.

இதில் தமிழக அரசு வர்தா புயலில் சென்னையில் மீட்பு பணிகள் ஏற்படுத்தியது போன்று அனைத்து அமைச்சர்களையும் அங்கு அனுப்பி அந்த மக்களின் துயரத்தை போக்க வேண்டும். மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்கும் போது மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் என அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இது வரை ஒக்கி புயலால் பலியானவர்கள் எண்ணிக்கை தெரிய வில்லை. அவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

அதேபோல் மத்திய அரசிடமிருந்தும் புயல் நிவாரணத்தை பெறவேண்டும்.

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை ஒரு வாரத்திற்கு முன்பு கூறிவிட்டேன் .

விஷால் திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதாக அறிவித்திருப்பது யாராலும் ஏற்று கொள்ள முடியாது.

குறிப்பிட்ட சில ஆண்டுகளாவது மக்கள் பணியாற்றிவிட்டு முறையாக தேர்தல் பணியாற்ற வர வேண்டும்.

நேற்றுவரை நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப் பேற்றுவிட்டு திடீரென்று ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாரையும் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் வரலாம். குறிப்பிட்ட காலம் மக்கள் பணி செய்து விட்டு வந்தால் எல்லோரும் வர வேற்பார்கள். ஆனால் நடிகர் விஷாலை ஆர்.கே.நகர் மக்கள் யாரும் வரவேற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* * * தமிமூன் அன்சாரி

Tags:    

Similar News