செய்திகள்

ஆர்.கே நகர் தேர்தல்: தி.மு.க நிலைப்பாடு என்ன? - ஸ்டாலின் தலைமையில் நாளை கூட்டம்

Published On 2017-11-24 14:51 GMT   |   Update On 2017-11-24 14:51 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மறைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியதைடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உத்தரவிட்டபடி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆர்.கே நகர் தேர்தலின் போது தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News