செய்திகள்

குறைந்த விலைக்கு திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆன்-லைனில் விற்ற கும்பல்

Published On 2017-11-24 09:27 GMT   |   Update On 2017-11-24 09:27 GMT
குறைந்த விலைக்கு திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆன்-லைனில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

போரூர் பைபாஸ் சாலையில் இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கெருகம்பாக்கத்தை சேர்ந்த பிரித்விராஜ், ஆவடியை சேர்ந்த புருசோத்தமன் என்பது தெரியவந்தது.

அவர்கள் போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிள்களில் பதிவு எண்ணை மாற்றி போலி ஆவணங்கள் மூலம் ஆன்-லைனில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆன்-லைனில் திருட்டு மோட்டார் சைக்கிள் விற்பனையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக கைதானவர்களின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News