செய்திகள்

சென்னை வங்கி அதிகாரிகள் ரூ.174 கோடி மோசடி: 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

Published On 2017-11-20 08:58 GMT   |   Update On 2017-11-20 08:58 GMT
போலி ஆவணம் மூலம் வெளிநாட்டுக்கு பணம் பரிமாற்றம் தொடர்பாக சென்னை வங்கி அதிகாரிகள் 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை:

சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளி நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல போலி பில்கள் தயாரித்து கோடிக் கணக்கான ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அன்ட் ஜெய்ப்பூர் என்ற வங்கியின் சூளைமேடு, ஆழ்வார்பேட்டை மற்றும் பஞ்சாப் கிளைகள் மூலம் இதற்கான பண பரிமாற்றம் நடந்துள்ளது.

6 நிறுவனங்களும் 486 முறை பணத்தை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.174.5 கோடிக்கு அன்னிய செலாவணி மோசடி நடந்தது தெரிய வந்தது. இதை சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக வங்கியின் சூளைேடு கிளையைச் சேர்ந்த திக்ஷித்துலு, ஆழ்வார்பேட்டை கிளையைச் சேர்ந்த ராமச்சந்திரன், பஞ்சாப் மாநில கிளையைச் சேர்ந்த அனுஜ் சுக்லா ஆகிய 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டதாக திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, சி.ஐ.டி. நகர், பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய 6 இடங்களில் இயங்கி வந்த 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015-ம் அண்டு மே, ஜூன் மாதங்களில் இந்த மோசடி நடந்துள்ளது.

மோசடி, கூட்டு சதி, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிந்ததும் இந்த வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News