செய்திகள்

காங்கிரசுக்கு ஆதரவான செயல்பாடு: அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு பாரதீய ஜனதா கண்டனம்

Published On 2017-11-16 11:36 GMT   |   Update On 2017-11-16 11:37 GMT
காங்கிரசுக்கு ஆதரவான செயல்படும் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில துணை தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற புதுவை அரசு சபாநாயகரை வைத்து ஆளும் காங்கிரஸ் அரசு தனது முழுநேர அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது.

அதற்கு லாவணி பாடும் விதமாக நேர் எதிர் கூட்டணியில் உள்ள புதுவை அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் ஊது குழலாக செயல்படுகிறது.

நியமன எம்.எல்.ஏ.க் களை பொறுத்த வரை ஆளும் அரசுக்கு தெரியாமல் புதுவை அரசிதழில் வெளியிட முடியாது. மேலும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து விடுக்கின்ற அரசாணைகளை பின் பற்றித்தான் புதுவை அரசு இயங்குகிறது என்பதை அன்பழகன் எம்.எல்.ஏ. அறியாமல் பேசுகின்றாரா?

அன்பழகன் எம்.எல்.ஏ. காங்கிரஸ் அரசின் கொள்கை பரப்பு செயலாளராக சுய பதவி பிரமாணம் எடுத்து கொண்டு பரப்புரையாற்றுவதை அ.தி.மு.க.வினர் எவரும் விரும்பவில்லை. கடந்த ஒரு வருடத்துக்குள் எத்தனை முறை அணி மாறினார்? என்று அ.தி.மு.க.வினருக்கே தெரியாது.

எடப்பாடிக்கு ஒரு முகமும், டி.டி.வி. தினகரனுக்கு ஒரு முகமும், புதுவை காங்கிரஸ் அரசுக்கு ஒரு முகமும் என 3 முகம் காட்டி தனது நவீன அரசியல் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டே போகிறார்.

எங்களது கட்சியின் மாநில தலைமை இவரின் 3 முகத்தைதான் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகாராக கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News