செய்திகள்

வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

Published On 2017-11-11 07:16 GMT   |   Update On 2017-11-11 07:16 GMT
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு காலத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யலாம்.


சென்னையைப் பொருத்தவரையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினத்தில் 9 செ.மீ. மரக்காணத்தில் 7 செ.மீ., கடலூரில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News