செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

Published On 2017-11-10 12:39 GMT   |   Update On 2017-11-10 12:39 GMT
தென்காசி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மாணவ- மாணவிகள் இருபாலரும் படித்து வருகின்றனர்.

இங்கு நெல்லை பேட்டையை சேர்ந்த ராஜ் என்பவர் தமிழ் ஆசிரியராக கடந்த ஒரு ஆண்டாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். இவர் இலஞ்சி கோமதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது வீட்டில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், மாணவிகளுக்கு மாலையிலும் டியூசன் சொல்லி கொடுத்துள்ளார்.

மாலையில் மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் போது இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததாகவும், சில மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதுடன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திடம் புகார் கூறியுள்ளனர்.

அதற்கு அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டிப்பதாக கூறினாராம். ஆனாலும் மாணவிகள் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ- மாணவிகள் வீட்டுக்கு செல்லாமல் பள்ளி வளாகத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 10 மணி வரை நடந்தது. எனினும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

தமிழ் ஆசிரியர் ராஜ் மற்றும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ஆகியோரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழ் ஆசிரியர் ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பள்ளி செயலர் சண்முக வேலாயுதம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

அவர்களில் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். தமிழ் ஆசிரியர் ராஜ் மற்றும் பள்ளி செயலர் சண்முக வேலாயுதம் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News