செய்திகள்

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தம்

Published On 2017-11-09 17:53 GMT   |   Update On 2017-11-09 17:54 GMT
சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ. விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த வருமான வரித்துறை சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இல்லம், கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ விவேக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் நாளை வரை சோதனை தொடரும் என கூறியிருந்தனர். நீலகிரியில் உள்ள கோடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் நடைபெற்ற வருவமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்ததையடுத்து, எஸ்டேட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அடைத்தனர். நாளையும் அங்கு சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ. விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டின் முன்பு போலீசார் மற்றும் விவேக் ஆதரவாளர்களிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டது. மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு மூத்த அதிகாரிகளுடன் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News