செய்திகள்

சாமளாபுரம் அருகே டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல்

Published On 2017-11-09 11:20 GMT   |   Update On 2017-11-09 11:21 GMT
பொதுமக்கள் போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தேவராயம் பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக விசைத்தறி உரிமையாளர்களும் போராட்டம் நடத்தினார்கள். இதனால் விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை.

இந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி மனு அளிக்க தேவராயம் பாளையத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திறகு வந்தனர்.

அவர்கள் தங்கள் கையில் வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இருந்தனர். டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக அறிவித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள் இதனால் பரபரப்பு உருவானது.

அவர்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் கலெக்டர் பழனிச்சாமியை சந்தித்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் பழனிச்சாமி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கலெக்டர் உத்தரவை தொடர்ந்து தேவராயன்பாளைத்தில் உள்ள டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட உள்ளது.
Tags:    

Similar News