செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை: பா.ஜனதா பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2017-11-08 09:40 GMT   |   Update On 2017-11-08 09:40 GMT
பா.ஜனதா கட்சியினர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். பேரணிகள் நடத்தி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர்.
சென்னை:

கடந்த ஆண்டு இதே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பும் இருந்தது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் இன்று போராட்டமும் நடந்தது. இதே போல நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. குஜராத்தில் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் மக்கள் விரோத செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியினர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி மக்களிடம் எடுத்துக் கூறும் விதத்தில் துண்டு பிரசுரங்களை வினியோகித்துள்ளனர். பல இடங்களில் பேரணிகளையும் நடத்தி உள்ளனர். இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர்.

சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்காவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய செயலாளர் இல.கணேசன், பி.டி.அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News