செய்திகள்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 930 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம்: கலெக்டர்

Published On 2017-10-24 12:01 GMT   |   Update On 2017-10-24 12:01 GMT
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 930 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கலெக்டர் வீரராகவராவ் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகிறார். இன்றும் அவர் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

அதன்பின்னர் கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் அனைத்து துறைகளும் சேர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக ஏற்கனவே 6 ஆயிரத்து 217 பேர் பணி அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 3 ஆயிரத்து 280 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 597 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 240 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 46 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது வரை மொத்தம் 176 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் முதல் இன்று வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 740 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.

கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் நிறுவனங்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 930 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு உள்ளது.

டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News