செய்திகள்

பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் நாளை மறுநாள் உண்ணாவிரதம்

Published On 2017-10-22 15:10 GMT   |   Update On 2017-10-22 15:10 GMT
பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வலியுறுத்தி பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் நாளை மறுநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு தனது நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தொடங்கினார்.

நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்த அவர் நேற்று மதியம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தட்ரஅள்ளி வழியாக காரிமங்கலத்துக்கு இரவில் வந்து சேர்ந்தார்.

காரிமங்கலம் எல்லையில் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். இரவில் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அவர் தங்கினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி அளவில் காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு குமரி அனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து காரிமங்கலத்தில் 40 ஆண்டு காலம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து காலம்சென்ற பி.சி.ஆர். ராமன் இல்லத்துக்கு சென்றார். அங்கிருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

இன்று பொம்மஅள்ளி, முரசுப்பட்டி, முதலிப்பட்டி, கெட்டூர், அனுமந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார். அனுமந்தபுரத்தில் உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அங்கிருந்து ஆரதவள்ளி வழியாக சென்று இன்று இரவு பாலக்கோடு சென்றடைகிறார்.

நாளை காலை பாலக்கோட்டில் இருந்து நடை பயணத்தை தொடங்கி பாப்பாரப்பட்டியில் முடிக்கிறார். இதையடுத்து நாளை மறுநாள் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணி சிவா நினைவகம் அருகே பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வலியுறுத்தி கட்சி தொண்டர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
Tags:    

Similar News