செய்திகள்

ஏ.ஜி.ஆபீஸ்- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் டிசம்பரில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2017-10-21 06:57 GMT   |   Update On 2017-10-21 06:57 GMT
ஏ.ஜி.ஆபீஸ்- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் ரெயில் நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. அதனால் டிசம்பர் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் நேரு பூங்கா- திருமங்கலம் இடையே சுரங்கப் பாதையில் முதன் முதலாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

சென்ட்ரல்- எழும்பூர்- நேரு பூங்கா இணைக்கும் சுரங்கப்பாதை பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

2018-ல் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் முழுமை அடைந்து வண்ணாரப்பேட்டை, மற்றும் சென்ட்ரலில் இருந்து விமானம் நிலையம் வரை முழுமையான சேவை தொடங்கப்பட உள்ளது.

கடந்த 7 வருடமாக அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இடையில் பணிகள் நடைபெறாமல் தொய்வு அடைந்தாலும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடக்கின்றன.

தேனாம்பேட்டை ஏ.ஜி. ஆபீஸ் முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.3 கிலோ மீட்டர் தூர சுரங்கப் பாதையில் 2018 மார்ச் மாதத்தில் சேவை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


தண்டவாளம் அமைத்தல், சிக்னல் பணி, ரெயில் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. அதனால் டிசம்பர் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.ஜி.ஆபீஸ்- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை- ஏ.ஜி. டி.எம்.எஸ்.- நேரு பூங்கா- சென்ட்ரல்- சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை இடையே ஒரு வழி சுரங்கப்பாதை பணி முடிந்தது.

இரண்டாவது வழியில் மே தின பூங்கா- தேனாம்பேட்டை-ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையே 450 மீட்டர் இடையே 3 மாதங்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை, ஏ.ஜி.டி.எம்.எஸ். வரையும், விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் வரையும் 2018 மார்ச்சில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

ஏ.ஜி.டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் நிலையங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் முடிக்க 2018 ஜூலை வரை ஆகும். இந்த பணிகள் முடிக்கப்பட்டு 2018 டிசம்பரில் இப்பாதையில் விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும்.

ஏ.ஜி. ஆபீஸ் -சைதாப்பேட்டை இடையே ரெயில் நிலைய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிளாட்பாரம் ஸ்கிரின், தானியங்கி டிக்கெட் வழங்கும் கதவுகள், சிக்னல், ஏ.சி. வசதி போன்றவை நிறைவடைந்துள்ளன.

டி.எம்.எஸ். மிக முக்கியமான பகுதியாக இருப்பதால் அங்கு இருபுறமும் உள்ள நிலையத்தை கடக்க வசதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News