செய்திகள்

மெர்சல் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்குவாரா?: விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

Published On 2017-10-20 08:22 GMT   |   Update On 2017-10-20 08:22 GMT
மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினியும், கமலும் அரசியலில் குதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக கமல் தனது புதிய கட்சி பற்றி அறிவிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதற்கான எந்த பணிகளும் நடைபெறாததால், அவரது அரசியல் பற்றி மக்கள் சற்று சலிப்பான மனநிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், ரஜினி, கமல் இருவரையும் “மெர்சல்” ஆக்கும் வகையில் புதிய எதிர்பார்ப்பை “இளைய தளபதி” விஜய் உருவாக்கி இருக்கிறார். “மெர்சல்” படம் வெளியான முதல் நாளே அரசியலில் தீ பயங்கரமாக பற்றி எரியத் தொடங்கி விட்டது. மத்திய அரசை தாக்கும் வகையில் படத்தில் வரும் வசனங்கள் இருப்பதாக தகவல்கள் பரவியதும் ‘மெர்சல்’ பற்றி மக்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா பற்றியும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புப் பற்றியும் தாக்கிப் பேசப்படும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கரவொலியை ஏற்படுத்துவதில் இருந்து இதை நன்கு உணர முடிகிறது.

இது மட்டமின்றி விஜய் பேசும் பல வசனங்கள் இன்றைய அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் மெர்சலாக்கி உள்ளன. ஏற்கனவே விஜய் தமது முந்தையப் படங்களிலும் அரசியலை சாடும் வசனங்கள் பேசியுள்ளார்.

2ஜி ஊழல் பற்றி கூட அவர் ஒரு படத்தில் சூடாக வசனம் பேசினார். ஆனால் மெர்சல் பட வசனங்கள் விஜய்யின் அரசியல் ஆக்ரோ‌ஷத்தை அதிகப்படுத்திக் காட்டுவதாக உள்ளன.

“ஜி.எஸ்.டி. வரி 7 சதவீதம் வாங்குகிற சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம். ஆனால் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வாங்குகிற இந்தியாவில் மருத்துவம் இலவசமில்லை” என்று அவர் பேசும் வசனத்துக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

அதுபோல, “நான் போட்டு இருக்கிற டிரஸ்சும், பேசுகிற பாஷையும் தான் பிராப்ளம்னா... மாற வேண்டியது நான் இல்ல நீங்கதான்”, “மனிதாபிமானம்ங்கறது ஸ்பெ‌ஷல் குவாலிட்டி இல்ல, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி”, “எப்பல்லாம் நாம பெரிய ஆள் என்ற தலைக்கனம் வருகிறதோ, அப்பவெல்லாம் ஏர்போர்ட் வந்தால் நாம் ஒரு சாதாரண ஆள் என்று செக்கிங்கில் சொல்லிடுவாங்க” என்பன போன்று விஜய் பேசும் சீர்திருத்த கருத்து வசனங்களும் சூட்டை கிளப்புகின்றன.

மொத்தத்தில் ‘மெர்சல்’ படம் நடிகர் விஜய்யின் அரசியல் உலக பிரவேசத்துக்கு மிக வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.

ஒரு குழந்தை பிறக்கணும்னா 10 மாசம். ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் என்ற விஜய்யின் வசனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர் பார்ப்பை எகிற செய்துள்ளது.



நடிகர் விஜய்க்கு சினிமா மட்டுமல்ல.... அரசியலிலும் ஒரு கண் உண்டு. அவர் செய்து வரும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை நன்கு உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

அரசியல் மீதான தனது ஆசையை, விருப்பத்தை 2009-ம் ஆண்டிலேயே விஜய் வெளிப்படையாக கூறி விட்டார். புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய போது, அவர் அரசியலுக்கு வருவேன் என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ரூபாய் போட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பாகவும் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அவரிடம் உள்ள அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தின.

ராகுல்காந்தியை அவர் சந்தித்து பேசியபோது விஜய் மீதான அரசியல் பார்வை அதிகரித்தது. இன்று ‘மெர்சல்’ விஜய்யின் அரசியல் பிரவேச எதிர்பார்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


விஜய் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வற்புறுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்கள் அனைவருமே அவரது அரசியல் அதிரடிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மெர்சல்’ படத்துக்காக ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் அனைத்தும் இதையே பிரதிபலித்தன.

விஜய் மட்டும் “அரசியலுக்கு தயார்” என்று ஒரே ஒரு அறிவிப்பு வெளியிட்டால் போதும், ரசிகர்கள் சரவெடியாக மாறி விடுவார்கள். ஆனால் ரசிகர்களை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

விஜய்யின் திரை உலக வெற்றிகளுக்கு அடித்தளங்கள் அமைத்து கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் அடுத்தக்கட்டமாக அரசியல் வானிலும் விஜய் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தள கட்டுமானத்தை உருவாக்கி வருகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனை, காவிரி நதி நீர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனை, கதிராமங்கலம் பிரச்சனை என்று ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளின் போதும் விஜய்யின் கருத்தையும் குரலையும் அவர் மிகத் தெளிவாக வெளிப்பட செய்தார். அந்த வரிசையில் தற்போது “மெர்சல்” மூலம் விஜய் அரசியலுக்கு விரைவில் வரப்போவதை அவர் கூறி இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

எனவே தான் விஜய்யை எதிர்த்து குரல் கொடுத்த பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக ரசிகர்கள் கண்டன குரலை உயர்த்தி உள்ளனர். “விஜய் பேசிய வசனத்தில் என்ன தவறு உள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதே கேள்வியை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியும் கேட்டுள்ளார். ஜி.எஸ்.டி. வரி பற்றி விஜய் பேசும் வசனத்தில் எந்த தவறும் இல்லை என்று டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். வேறு சில அரசியல் தலைவர்களும் அந்த வசனத்தை ஆதரிக்கிறார்கள்.

‘மெர்சல்’ படத்தில் வரும் வசனங்கள் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விஜய் அடுத்து அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.

விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதே 99 சதவீத ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. விஜய்யும் அந்த முடிவைத் தான் எடுப்பார் என்கிறார்கள்.

தற்போதைய வெற்றிடத்தை பூர்த்தி செய்ய விரைவில் அவர் கட்சி தொடங்குவார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் விஜய் கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவார்? கட்சிக் கொடி எப்படி இருக்கும்? என்பன போன்ற சூடான விவாதங்கள் உருவாகியுள்ளன. இந்த விவாதங்கள் எழுப்பும் ஓசையே விஜய் அரசியல் வாழ்வை தீர்மானிப்பதாக அமையும்.
Tags:    

Similar News