செய்திகள்

மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

Published On 2017-10-12 11:24 GMT   |   Update On 2017-10-12 11:24 GMT
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குநர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசாணை எண் 50-ல் மொழிப்பாடம் மற்றும் செய்முறைத்தேர்வுகள் அல்லாத பாடங்களில் 10மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களாகவும், 90 மதிப்பெண்கள் தேர்வு அடிப்படையிலும் வழங்கப்படும். 90மதிப்பெண்களில் தேர்ச்சி பெற 25 மதிப்பெண்களை பெற வேண்டும்.

செய்முறைத் தேர்வு கொண்ட பாடங்களில் 70மதிப்பென்களுக்கு தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி மதிப்பெண்ணாக 15மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறைத் தேர்வுகளை கட்டாயம் செய்ய வேண்டும். செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளை சேர்த்து மொத்தம் 35மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அகமதிப்பீட்டு முறையை பொறுத்தவரை செய்முறை தேர்வற்ற மாணவர்களுக்கு 10மதிப்பெண்ணும்,தொழில் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

இதுபோல மதிப்பெண்கள் வழங்குவதிலும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதமானது. ஆகவே, மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண்50-ஐ ரத்து செய்யவேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு, இது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் செயலர், இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News