செய்திகள்

நந்தனம் நுகர்பொருள் கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு

Published On 2017-10-11 11:01 GMT   |   Update On 2017-10-11 11:01 GMT
சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவுத்துறை அமைசர் காமராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில்லை என பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மக்களுக்கு தேவைப்படும் பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசு சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் உணவு அமைச்சர் காமராஜ் ரேஷன் கடைகளில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றதா என்பதை உறுதிசெய்யவே 
ஆய்வு நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நந்தனத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பொருள்களின் தரத்தை சோதித்து பார்த்தார். அதை தொடர்ந்து, அங்குள்ள கடைக்கு வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் எலக்ட்ரானிக் தராசில் சரியான எடையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

அதன்பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

ரேஷன் கடைகளில் போதிய தரமான உணவு பொருள்கள் கையிருப்பில் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு தட்டுப்பாடு இல்லாமல் பொருள்கள் கிடைப்பதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உரிய நேரத்தில் பொருள்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 28 லட்சம் பேருக்கு இன்னும் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவில்லை. விரைவில் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News