செய்திகள்

புதுவை மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவர்னர் நாளை நடைபயணம்

Published On 2017-10-06 09:49 GMT   |   Update On 2017-10-06 09:49 GMT
கவர்னர் கிரண்பேடி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை புதுவை மக்களிடம் ஏற்படுத்த நாளை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் கவர்னர் கிரண்பேடி நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

நேற்றைய தினம் சபாநாயகர் வைத்திலிங்கத்தின் தொகுதியான காமராஜர் நகர் தொகுதி, முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நெல்லித்தோப்பு தொகுதி ஆகிய பகுதிகளில் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதி மக்களிடம் குப்பைகளை தெருக்களில் கொட்டாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தினார். காலி மனைகளில் குப்பைகளை கொட்டினாலும், தண்ணீர் தேங்கினாலும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையின் 2-வது நாளாக இன்று முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த திருவள்ளுவர் நகர் பகுதியில் கவர்னர் ஆய்வு செய்தார். அங்கு வீதி, வீதியாக சென்ற அவர் பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை புதுவை மக்களிடம் ஏற்படுத்த நாளை (சனிக்கிழமை) நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 5 கிமீ தொடர்ந்து வீதி, வீதியாக நடந்து சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன்.

அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான பிரச்சினைகளுக்காக எந்நேரமும் என்னை சந்திக்கலாம். அதற்கான தீர்வுகளையும் காணலாம். இதற்கு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News