செய்திகள்

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: கலெக்டர் தகவல்

Published On 2017-09-23 14:53 GMT   |   Update On 2017-09-23 14:53 GMT
தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. 10 ரூபாய் நாணயங்களை வியாபார நிறுவனங்கள் வாங்க மறுத்தனர். குறிப்பாக, அரசு பஸ்களில் கண்டக்டர்கள் வாங்க மறுத்ததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் ஏராளமான புகார்கள் வந்தது.

10 ரூபாய் நாணயங்கள் இந்திய அரசால் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. மேலும் ஒரே மதிப்பில் இரண்டு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த இரண்டு விதமான நாணயங்களும் சட்டப்பூர்வ பண மதிப்பை பெற்ற நாணயங்களாகும். இத்தகைய நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் இது குறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு வியாபார அமைப்பு மற்றும் போக்குவரத்து கழக கண்டக்டர்கள், 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News