செய்திகள்

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Published On 2017-09-23 04:30 GMT   |   Update On 2017-09-23 04:30 GMT
சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சேலம்:

கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று (23-ந்தேதி ) நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று அவர் விமானத்தில் வந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் சேலத்திற்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அவினாசியில் விபத்தில் இறந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை தாரையில் உள்ள கந்தசாமியின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சேலம் மாவட்டம் கெங்காணபுரத்திற்கு வந்த முதல்வர், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கதிர்வேல் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதே போல கச்சுப்பள்ளியில் உள்ள ஜேம்ஸ் வீட்டிற்கும், கோவலன்காட்டில் உள்ள ரத்தினம் வீட்டிற்கும் சென்று அவர்களது உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு இரவு 12 மணியளவில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சரவணன், சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தனது வீட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெற்றிவேல், மருதைமுத்து உள்பட பலருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சேலத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக கேட்டறிந்தார். விழாவுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சில அறிவுரைகளையும் கட்சியினருக்கு வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றார்.

கிருஷ்ணகிரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று பிற்பகல் புறப்பட்டு செல்கிறார். மீண்டும் இரவில் சேலம் வரும் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். இதையொட்டி அவரது வீடு மற்றும் அவர் செல்லும் வழிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News