செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2017-09-23 02:16 GMT   |   Update On 2017-09-23 02:16 GMT
சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 போகம் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டிய நிலையில் 3 போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழை பால் வார்த்திருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியுள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடகத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விடும். இதனால் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கத் தேவையான 90 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை சில நாட்களில் எட்டிவிடக்கூடும். நடப்பாண்டில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் பெற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது மேட்டூர் அணையிலிருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரின் அளவு, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரிலிருந்து எவ்வளவு நீரை வாங்க முடியும், வட கிழக்கு பருவமழை அளவு குறித்த உத்தேச மதிப்பீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

விதை விதைத்து நாற்று தயாரிக்க எவ்வளவு நாள் தேவையோ, அவ்வளவு நாட்களுக்கு முன்பாகவே மேட்டூர் அணை திறப்பு தேதியை அரசு அறிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News