செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மோனோ ரெயில் - டிராம் வண்டி: நாராயணசாமி அறிவிப்பு

Published On 2017-09-21 15:56 GMT   |   Update On 2017-09-21 15:56 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மோனோ ரெயில் மற்றும் டிராம் வண்டிகள் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த புதுவை அரசு ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் பதிவு சான்றிதழை முதல்அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டு கேக் வெட்டினார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை நிறுவ முடிவு செய்தது. புதுவை யூனியன் பிரதேசத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு சேதராப்பட்டை மையமாக வைத்து 2 முறை ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசின் அனுமதி கோரியது. ஆனால் மத்திய அரசு 2 முறையும் அதை நிராகரித்தது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் புதிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அனுமதி பெற்றது. நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் 1,468 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,827 கோடியே 82 லட்சம் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பித்தோம்.

இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 23-ந்தேதி தேர்வு செய்தது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த தனி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் மூலமே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதன்படி புதுவை ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2013-ம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் கடந்த 5-ந்தேதி பதிவு செய்துள்ளோம்.

இந்த நிறுவனம் அடுத்து வரும் 4 ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தும். இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக அரசு செயலர் ஜவகர் செயல்படுவார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தடையற்ற மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சாலையை அகலப்படுத்தி அழகுபடுத்துதல், பாரம்பரியத்தை பாதுகாத்தல், நகர்ப்புற வறுமை ஒழிப்பு போன்றவற்றை உள்ளடக்கி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். மோனோரயில், டிராம் வண்டி மற்றும் சைக்கிளில் செல்ல தனிபாதை, நகருக்குள் கால்வாய் மூலம் படகு போக்குவரத்து ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்படும். மாநிலத்திற்கேற்ப குறைந்தபட்சம் எலக்ட்ரிக் பஸ் திட்டத்தையாவது செயல்படுத்த உள்ளோம்.

ஸ்மார்ட் சிட்டியில் ரூ.50 கோடிக்கு மேலான திட்டங்களுக்கு உலகளாவிய டெண்டர் விட வேண்டும். எந்தவொரு கொள்கை முடிவையும் அமைச்சருடன் கலந்துபேசி எடுக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் பிரெஞ்சு அதிபர் மைக்ரோனி டெல்லி வருகிறார். அப்போது புதுவைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலகண்ணன், லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, தலைமை செயலாளர் மனோஜ்பரிதா ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News