செய்திகள்

கீரிப்பாறை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது

Published On 2017-09-20 11:00 GMT   |   Update On 2017-09-20 11:00 GMT
கீரிப்பாறை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

தடிக்காரன் கோணம் பிரிவு வனவர் விஜயகுமார் வனக்காப்பாளர் ஜெயசேகர், வனக்காவலர் ஜோயல் ஆகியோர் பூதப்பாண்டி அருகே கீரிப்பாறை வனப் பகுதியான வீரப்புலி காட்டுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் 3 நபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை வனக்குழுவினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில், ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் குலசேகரம் அருகே வெள்ளாந்தி காணிக்குடியிருப்பு பிராவிளையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35), குமார் (36) என்பது தெரிய வந்தது.

பிடிபட்ட இருவரிடமும் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் இரு வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவிலில் உள்ள வன அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தப்பியோடிய நபர் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தப்பியோடியவர் மது குட்டிகாணி என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், குமார் இருவரையும் நாகர்கோவில் கோர்ட்டில் வனத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News