செய்திகள்

புதுவையில் சி.பி.ஐ. அலுவலகம், ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி கருத்து

Published On 2017-09-14 06:38 GMT   |   Update On 2017-09-14 06:38 GMT
புதுவையில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ. அலுவலகம், ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் மாநில அரசோடு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.

அரசு பல முறைகேடு, ஊழல்களில் ஈடுபடுவதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தார். மருத்துவக்கல்லூரி சென்டாக் மாணவர் சேர்க்கையில் நேரடியாக தலையிட்டார்.

இத்தகைய சமயங்களில் புதுவையில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை விசாரிக்க சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பு தேவை என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் கூறி வந்தார்.

மேலும் புதுவையில் ஐகோர்ட்டு கிளையும், சி.பி.ஐ.க்கு தனி அலுவலகமும் அமைக்க வேண்டும் என்றும் கூறி வந்தார்.

தற்போது கடந்த ஆண்டு தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் 767 மாணவர்களை இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சென்டாக்கில் முறைகேடுகள் நடப்பதாக கூறி வந்த கவர்னருக்கு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை தனது கருத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் சென்டாக் முறைகேடு தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வெளியிட்டு, இதற்காகத்தான் புதுவையில் சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பும், தனி சி.பி.ஐ. அலுவலகமும், ஐகோர்ட்டு கிளையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News