செய்திகள்

குமரியில் பரவலாக பலத்த மழை: முள்ளங்கினாவிளையில் 34 மி.மீ. பதிவு

Published On 2017-09-13 11:15 GMT   |   Update On 2017-09-13 11:15 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முள்ளங்கினாவிளை பகுதியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெய்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்த வந்த நிலையில் மாலையில் முள்ளங்கினாவிளை, அடையாமடை, கோழிப்போர்விளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவானது.

நாகர்கோவிலில் இன்று காலையில் 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பின்னர் மழை தூறிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மழையின் காரணமாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட கேப் ரோடு சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

கன்னியாகுமரி, அஞ்சு கிராமம், சாமித்தோப்பு, வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, குழித்துறை, இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீர் திடீரென பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

மலையோர பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 14.40 அடியாக இருந்தது. அணைக்கு 373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.10 அடியாக இருந்தது. அணைக்கு 318 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் கடந்த 11 மாதமாக வறண்டு காணப்பட்டது. நகர மக்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் பிளஸ் அடியை எட்டுமென்று எதிர்பார்க்கப் படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பெருஞ்சாணி-3.2, இரணியல்-5.4, ஆணைக்கிடங்கு-25.6, மாம்பழத்துறையாறு-15, குளச்சல்-3, அடையாமடை-26, கோழிப்போர் விளை-30.5, முள்ளங்கினாவிளை-34, புத்தன் அணை-2.8, நாகர்கோவில்-7.8, பூதப்பாண்டி-10.8, சுருளோடு-7.2, கன்னிமார்-12.5, ஆரல்வாய்மொழி-6, பாலமோர்-14.4, தக்கலை-13, குழித்துறை-3.2. களியல்-6.8.
Tags:    

Similar News