செய்திகள்

ஓசூர் அருகே லாரி மோதி 2 பயணிகள் பலி

Published On 2017-08-28 11:24 GMT   |   Update On 2017-08-28 11:24 GMT
ஓசூர் அருகே இன்று அதிகாலை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் 2 பயணிகள் இறந்தனர்.

ஓசூர்:

திருவண்ணாமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரை நோக்கி நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்ட அள்ளி பக்கத்தில் வந்தபோது திடீரென பஸ் பழுதானது.

இதனால் டிரைவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் செல்வதற்காக கீழே இறங்கினர்.

கண்டக்டர் அனைவரையும் மாற்று பஸ்சில் ஏற்றி விடுவதற்காக சாலையில் காத்திருந்தார். பயணிகள் அனைவரும் பழுதான பஸ்சின் பின்பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த லாரி பஸ்சுக்காக காத்திருந்த அந்த பயணிகள் மீது பயங்கரமாக மோதி சென்று பழுதாகி நின்ற பஸ்சின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகிய 2 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பெண்கள் 2 பேர் பலத்த காயம் அடைந் தனர்.

இது குறித்து தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பலியான சுரேஷ் மற்றும் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி அவர்களுடைய உறவினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவ மனைக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த லாரியில் உள்ள பதிவு எண்ணை கொண்டு டிரைவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News