செய்திகள்

கல்வராயன்மலையில் பலத்த மழை: கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2017-08-18 17:42 GMT   |   Update On 2017-08-18 17:42 GMT
கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது.

கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்து போனதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

மேலும் கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அணை தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் கோமுகி அணை பாசன விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் விவசாயம் செய்ய தயக்கம் காட்டி வந்தனர்.

இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக பொட்டியம் உள்ளிட்ட ஆறுகள் வழியாக வினாடிக்கு 200 கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் வறண்டு கிடந்த அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கோமுகி அணையை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News