செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் 33 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது: வானிலை மைய இயக்குனர் பேட்டி

Published On 2017-08-18 04:30 GMT   |   Update On 2017-08-18 04:30 GMT
ஜூன் 1-ந்தேதி முதல் இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 33 சதவீதம் அதிகமழை பெய்துள்ளது என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதனால் சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்து 2 நாட்களுக்கு, அதாவது இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கன மழை எந்த மாவட்டத்தில் பெய்யும் என்று கூற இயலாது.



கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் இதுவரை (நேற்று வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்யவேண்டிய சராசரி தென்மேற்கு பருவ மழை அளவு 15 செ.மீ. ஆகும். ஆனால் இந்த கால கட்டத்தில் இதுவரை 21 செ.மீ. மழை பெய்துள்ளது.

இது 33 சதவீதம் அதிக மழை அளவு ஆகும். கடந்த 6 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News