செய்திகள்

ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் எண்ணூர்-மகாபலிபுரம் ‘ரிங்’ ரோடு திட்டம்: மத்திய அரசு அனுமதி

Published On 2017-08-17 06:51 GMT   |   Update On 2017-08-17 06:51 GMT
சென்னையை சுற்றி 133 கிமீ நீளம் அமைய உள்ள எண்ணூர்-மகாபலிபுரம் வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் சென்னை நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மற்றும் கண்டெய்னர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலற்ற போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே தாம்பரம்- மதுரவாயல் - புழல் புறவழிச் சாலையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டமாக வண்டலூரில் தொடங்கி நசரத்பேட்டை நெமிலிச்சேரி, மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச் சாலையில் ஒரு வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் பணிகள் நடந்து வருகிறது.

இந்த சாலைகள் சென்னையின் தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை இணைத்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமலே செல்ல முடிகிறது.

இதற்கிடையே சென்னையைச் சுற்றிலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரத்தில் இருந்து எண்ணூர் வரை 133 கி.மீ. தூரத்துக்கு மிகப்பெரிய வெளிவட்ட சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு ரூ.12,301 கோடி செலவாகும் என்றும் திட்டமிடப்பட்டது.

எண்ணூர் துறைமுகத்துடன் இணைக்கும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சாலை முழுவதும் சென்னையைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது. 5 கட்டங்களாக இந்த சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய- மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு நிறுவனமும் நிதி உதவி அளிக்கிறது.

மகாபலிபுரத்தில் தொடங்கும் இந்த சாலை சிங்க பெருமாள்கோவிலில் தேசிய நெடுஞ்சாலையுடன் 6 வழிச்சாலையாக இணைக்கப்படும். இதில் இருபுறமும் இரு வழி சர்வீஸ் சாலைகளும், பாதசாரிகளுக்கான நடை பாதையும் அமைக்கப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சாலைப் பணி முடிவடையும் போது 4 லட்சம் கனரக வாகனங்கள் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து வரும் கண்டெய்னர்கள் மற்றும் கனரக வாகனங்களும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் கண்டெய்னர் மற்றும் கனரக வாகனங்களும் சென்னை நகருக்குள் வராமல் எண்ணூர் துறைமுகத்தை சென்றடைய முடியும்.

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News