செய்திகள்

வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்

Published On 2017-08-11 10:31 GMT   |   Update On 2017-08-11 10:31 GMT
வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள திருமாந்துறையில் ஓரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேப்பந்தட்டையை சுற்றியுள்ள நெய்குப்பை, மரவ நத்தம் மற்றும் பல பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளிக்கு சென்று படித்து விட்டு அதே வேனில் திரும்பி வருவது வழக்கம். இந்த வேனை நெய்குப்பை அடுத்து உள்ள என்புதூரை சேர்ந்த சின்னராசு (25) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் சின்னராசு பள்ளி வேனை நெய்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஓட்டி சென்றார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு திருமாந்துறையில் உள்ள பள்ளி நோக்கி ஓட்டி சென்றார். வேனில் 30 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர்.

மரவநத்தம்-வி.களத்தூர் சாலையில் வி.களத்தூர் அருகே நடுரோட்டில் சென்ற போது வேன் திடிரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் வி.களத்தூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக நெய் குப்பை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் சின்னராசு படுகாயம் அடைந்தார். அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News