செய்திகள்

புதிய கட்டிடத்தை திறக்க கோரி அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்

Published On 2017-08-10 09:57 GMT   |   Update On 2017-08-10 09:57 GMT
நாகர்கோவிலில் புதிதாக கட்டிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி நாகர்கோவில் கோணத்தில் கலைக்கல்லூரி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. மேலும் அந்த கல்வி ஆண்டே அரசு கலைக்கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடந்தது.

கட்டிடப்பணி முடியும் வரை நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைக்கல்லூரி செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அரசு பள்ளியில் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.

இங்கு மாணவ-மாணவிகளுக்கு மேஜை, நாற்காலி உள்பட அடிப்படை வசதி போதுமான அளவு செய்யப்படாததால் மாணவர்கள் சிரமத்துடன் வகுப்பில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனவே புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து வகுப்புகளை புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டுமென்று மாணவ- மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், வடசேரியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் குறை கேட்டார். கல்லூரி கட்டிடத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து புதிய அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த கட்டிடம் திறப்பு விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டது. கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி மற்றும் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து முடிக்கப்படாததால் திறப்பு விழா ரத்து ஆனதாக தெரிகிறது.

இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்ததும் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் வடசேரியில் செயல்படும் கல்லூரிக்கு இன்று செல்லாமல் கோணத்தில் உள்ள புதிய கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

அங்கு கலைக்கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அரசு கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாணவ- மாணவிகள் கோ‌ஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் நேசமணி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் கல்லூரி கட்டிடத்தை திறக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் அறிவித்து உள்ளதால் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Tags:    

Similar News