செய்திகள்

ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

Published On 2017-08-01 05:13 GMT   |   Update On 2017-08-01 05:42 GMT
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் கழகம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

60 நாட்கள் கெடு முடிந்து வருகிற 5-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் செல்ல போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில் இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கட்சியின் துணை பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரனை அழைக்காமல் நடக்கும் இந்த கூட்டத்தில் மோதல் நடந்து விடக் கூடாது என்பதில் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.

இதனை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வை சண்முகம் சாலை சந்திப்பில் தடுப்பு வேலிகள் அமைத்து இன்று காலையிலேயே போலீசார் நிறுத்தப்பட்டனர். அந்த சாலை முழுவதிலும் போலீசார் இருபுறமும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தலைமை கழகம் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் போது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News